Pages

Saturday, December 10, 2011

தமிழகத்தின் பெருங்கற்கால பாறை ஓவியங்கள்

தமிழகத்தின் பெருங்கற்கால பாறை ஓவியங்கள்
_____________________________________________________________________________

எழுத்துக்களின்பயன்பாட்டிற்கு முந்தைய அல்லது    எழுத்து ஆவணங்கள் கிடைப்பதற்கு முந்தைய காலம் வரலாற்றுக்கு முந்தைய காலமென வரலாற்று அறிஞர்களால் குறிக்கப்பெறுகிறது.01
                                                
        வரலாற்றுக்கு உட்படும் காலத்தைவிடவும் பல மடங்கு அதிகமான கால எல்லைகளைக் கொண்டதாக வரலாற்றுக்கு முந்தைய காலச்சூழல் அமைந்திருக்கிறது. இன்றைய காலஅளவிற்கேற்ப சுமார் 20 இலட்சம் ஆண்டுகளிலிருந்து கி.மு 400 வரையிலான ஆண்டுகளை தொல்பழங்காலம் என உலக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.02 இக்காலக்கட்ட சான்றுகள்தான் ஒரு சமூகத்தின் மிகக்கூடுதலான தொன்மையை, மூல கட்டமைப்பை வெளிப்படுத்த, விளக்க உதவுகின்றன. அவ்வகையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் மிக நீண்டதாக இருப்பினும், அக்காலத்து, மனித எச்சங்கள், மக்கள் விட்டுச் சென்ற சின்னங்கள் மிகவும் குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன.

        அந்தவகையில் மிகத் தொன்மையான ஊழிக்கால மனித எச்சங்கள் ஆப்ரிக்காவிலும் இந்தியாவில் சோன்பள்ளத்தாக்கிலும், பீக்கிங், ஜாவா ஆகிய பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

          கல்தோன்றி மந்தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்தக்குடி என்றெல்லாம் வார்த்தைகளால் வலைப்போடுவது வரலாற்றுப் பூர்வமான தொன்மங்களுக்கான ஆதாரங்களாவதில்லை. மாறாக வரலாற்றுப் பார்வையில் நிறுவப்படும் தொன்மங்கள் யாவும் புதைப்பொருட்கள், ஆற்றுப்படுகைகள், குகைகள், ஆய்வின் மூலம் நிறுவப்பட்டிருக்கும் தொல்பழங்காலத்து எச்சங்கள், என தொல்பழங்காலத்துக்கு தொடர்புடைய கண்டுப்பிடிப்புகளின் வாயிலாக பெறப்பட்ட தரவுகளே, இதுநாள் வரையில் தொல் சமூகத்திற்கான மூல ஆதாரங்களாக இருந்துள்ளன. அந்தவகையில் இக்கட்டுரை தமிழகத்தில் பல்வேறு, வரலாற்றுக்கு முந்தைய மனித எச்சங்கள் குறித்த ஆதாரங்களை ஆராய்வதாக அமைக்கப்பட்டுள்ளது. அதனப்படையில் தமிழகத்தில் பழங்கால தொல் - பெருங்கற்பாறைகள் நிறைந்தப் பகுதிகளாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சில பகுதிகளை கீழ்கண்டவாறு பகுக்கவும், ஆராயவும் முற்படுகின்றது.

தொல்பழங்காலம் அல்லது பெருங்கற்காலம் (கி.மு.2,50,000 – 10,000) :

1.   வடமதுரை (பழங்கற்காலம் – 2,00,000 ஆண்டு)
2.   அத்திரம்பாக்கம் (கி.மு.40,000 – 20,000 ஆண்டு)
இக்கால கட்டத்து மனிதன் காட்டுமிராண்டி தனமாக, வேட்டையாடுதல் ஒன்றையே தனக்கானத் தொழிலாகக் கொண்டிருந்துள்ளான்.

இடைக்கற்காலம் :

1.   குடியம் (கி.மு.40,000 – 20,000)
2.   சாயர்புரம் (கி.மு 8000 – 2000)

இக்காலக் கட்டத்தில் வாழ்ந்த இடைக்கால மனிதர்கள் நாடோடிவாழ்க்கை வாழ்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள் குகைகளில் வாழ்தல், வேட்டையாடுதல், உணவு உற்பத்திக்கான வேலைகளில் ஈடுபடுதல் என்ற மூன்றே மூன்று அடிப்படை நோக்கங்களுக்காக வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புதிய கற்காலம் :

1.   பையம்பள்ளி (கி.மு 2000 – 1000)
இக்காலக் கட்டத்தைச் சேர்ந்தவர்கள் வேலாண்மை தொழில் செய்யவும், மண் சுவராலான வீடுகளை கட்டவும் தெரிந்தவர்களாக இருந்திருக்கின்றனர்.

பெருங்கற் காலம் :

        அதிச்சிநல்லூர், சானூர், அமிர்தமங்கலம், கொற்கை, திருக்காம்புலியூர், உறையூர், அரிக்கமேடு, கொடுமணல், வல்லம், தேவாரம் என நூற்றுக்கணக்கான பெருங்கற்கால (கி.மு. 1000 – கி.பி.200) தடையங்கள் நிறைந்த பகுதிகள் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்காலக் கட்டத்தவர்கள் தங்களுக்கான வாழ்விடங்களை அமைத்தல், வண்ண கற்கலைப் பயன்படுத்துதல், அணிகலன்கள் செய்தல், உலோக கலைப்பொருட்கள் செய்தல், மண்பாண்டங்களை சமைத்தல், இருபினை மிகுந்த அளவில் பயன்படுத்துதல் என தொடக்கால மனித சமூகத்திலிருந்து பெருமளவு முன்னேற்றம் அடைந்தவர்களாக இருந்திருக்கின்றனர்.

பாறை ஓவியங்கள் :

        தமிழகத்தில் சுமார் 2,00,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே மனிதக்கூட்டம் வாழ்ந்து வந்தமைக்கான குலக்குறிகளாக குகைகள், கற்கருவிகள் முதாலான ஆதாரங்கள் கிடைத்தபோதும், அவர்களது கலை ஈடுபாட்டையும், சமூக செயல்பாடுகளையும் அறிய உதவும் வகையிலான ஆதாரங்கள் உலக அளவில் எதுவும் சரியாக கிடைக்கவில்லை. எனவே தமிழகத்தில் கிடைத்துள்ள பழங்கால பாறை ஓவியங்கள், உலகின் மிக தொன்மையான குகை ஓவியங்களாக இருக்கின்றன. ஸ்டமிரா என்னுமிடத்தில் 12 வயதி சிறுமியின் மூலம் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட - ஓவியத்தின் மூலம் அதன் காலம் 30,000 ஆண்டுகளுக்கு முந்தயது என்று அறியப்பட்டது. அதனடிப்படையில் பார்க்கும் பொழுது புதிய கற்கால மனிதனுக்கும் ஓரளவு படைப்புணர்வும், அதனை வெளிப்படுத்துவதற்கான பாங்கும் தெரிந்திருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமன்றி அன்று கண்டெடுக்கப்பட்ட ஓவியத்தோடு ஒப்பு வைத்து பார்க்கத்தக்க அளவில், அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ள பாறை ஓவியங்கள் சில முக்கியதுவம் பெறுகின்றன.  

தற்கால பாறை ஓவியங்கள் கிடைக்குமிடங்கள் :

1.    கீழ்வாலை
2.    செத்தவரை
3.    முத்துப்பட்டி
4.    ஆணைப்பட்டி
5.    திருமலை
6.    சிறுமலை
7.    காமய கவுண்டர்பட்டி
8.    வெள்ளருக்கும் பாளையம்
9.    மல்லபாடி
10.  பாடியாந்தல்
11.  சென்ரையன் பள்ளி
12.  ஆலம்பாடி
13.  கொள்ளூர்
14.  மகாராஜக்கடை
15.  கொணவக்கரை
16.  சீகூர்
17.  மல்ல சமுத்திரம்
18.  முழுதிப்பாடி
19.  ஓதிக்குப்பம்
20.  தட்டக்கல்
21.  குருவிநாயனபள்ளி
22.  மல்ல சத்திரம்
23.  முடிப்பிநாயணப் பள்ளி
24.  மூங்கில் புதூர்
25.  மயிலாடும்பாறை
26.  ஒப்பத்திவாடி
27.  தாளப்பள்ளி
28.  பெருமூங்கில்
29.  வெள்ளிரிக்கோம்பை
30.  வணங்கப்பழம்
31.  மோயர் பள்ளத்தாக்கு

மேற்கண்ட பாறை ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்ட இடங்களின் சூழல்களை  வைத்து, தமிழக வரலாற்றுக்கு முந்தைய கால பாறை ஓவியங்களின் சிறப்பியல்புகளை ஆராய முற்படலாம்.

1.   வாழ்விடங்கள் :

        வரலாற்றுக்கு முற்பட்ட மனிதனின் வாழ்விடமாகத் திகழ்ந்தவை இயற்கையான அமைவிடங்கள் என்று அழைக்கப்பட்ட குகைகளே. அவ்விடங்களே அக்கால மனிதனின் நாகரீகத்தையும் பண்பாடையும் அறிய பயன்படுகின்றன. பொதுவாக வரலாற்று தேடுதலில் இன்னும் குகை ஓவியங்கள் அதிகம் கண்டெடுக்கப்படவில்லை. பாறை ஒதுக்கங்களில் கிடைத்திருக்கும் ஓவியங்களைக் கொண்டே மேற்கண்ட கருத்துரை வழங்கப்படுகிறது. தமிழக அகழ்வாராய்ச்சியில் கிடைத்திருக்கும் பாறை ஓவியங்கள் அனைத்தும் கடினமான கற்பாறைகளின் மீது வரையப்பட்ட ஓவியங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

2.   விலங்கின உருவங்கள் :

        குகைகளில் வாழ்ந்த மனிதன் தன்னுடைய உணர்வின் வெளிப்பாட்டை, ஓவியமாக தீட்டிவைத்திருக்கிறான். அவற்றில் மிகச் சிறந்த இடத்தை பெறுவன விலங்கின ஓவியங்களாகும். மந்திரம், சடங்கு என்னும் நிலையில் அவைகள் பார்க்கப்படுகின்றன. இவ்வோவியங்கள் வெள்ளை மற்றும் செந்நிறம் கொண்ட ஓவியங்களாக இருக்கின்றன. இவ்வகை ஓவியங்களில் குதிரை, யானை, மான், மீன் போன்ற வடிவங்களே அதிகமாகக் காணப்படுகிறது.

3.   வேடைக் காட்சிகள் :

         பாறை ஓவியங்களில் விலங்கின காட்சியமைப்புகளுக்கு அடுத்தபடியாக மிக அதிக அளவில் வேட்டைக்காட்சிகளே காணப்படுகின்றது. தனித்து ஒருமனிதன் வேட்டையாடுவது போன்றும், சில இடங்களில் பலர் கூட்டமாக சேர்ந்து வேட்டையாடுவது போன்றும் ஓவியங்கள் காணப்படுகின்றன. இக்காட்சிகள் குறித்த வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து - பெருமளவில் அக்கால கட்டத்தில் இருந்த மாயம், மந்திரம், சடங்கு போன்ற நம்பிக்கைகளை இவ்வோவியங்கள் குறிப்பாதாக கூறப்படுகிறது. மல்லபாடி, செத்தவரை, சென்னராயன் பள்ளி, பேட்டைர் ஓரன் மலை, கொணவக்கரை, மல்ல சமுத்திரம், சிவமலை, ஒப்பந்திவாடி, குருவி நாயக்கம்பள்ளி, ஓரமணக்குண்டா ஆகிய இடங்களில் காணப்படும் பாறை ஓவியங்களில் வேட்டைக்காட்சிகள் இடம் பெறுகின்றன. அக்கால மக்களின் வேட்டை முறைமைகள் குறித்தும், சடங்கு நிகழ்வுகள் குறித்தும் இவ்வோவியங்கள் மூலம் அறிய முடிகின்றது.

4.   விலங்கின் தலையுடன் மனித உருவங்கள் :

        குகை ஓவியங்களில் காணப்படும் மற்றொரு சிறப்பு விலங்கினத்தின் தலையுடன் கூடிய, மூக்கு வடிவம் கொண்ட மனித ஓவியங்கள். தொன்மையான பல குகை ஓவியங்களில் இவ்வகை ஓவியங்கள் இடம் பெறுகின்றன. இவற்றால் அக்கால மனிதனிடம், விலங்கினத்தைப் போன்று வேடம் அணிந்துகொள்ளும் பழக்கம் இருந்ததுவந்தது தெரியவருகிறது. பொதுவாக இவ்வகை ஓவியங்கள் சடங்கு, மாயம், மந்திரம் என்பவற்றுடன் மிக நெருங்கி தொடர்புடையவனாக இருக்கக்கூடும் என்று நடன காசிநாதன் தன் ஆய்வுப்பகுதியில் குறிப்பிடுகின்றார்.03

        இவர் கூறுவதைப்போல அக்கால மனிதன் நிகழ்த்திய சடங்கு நிகழ்வுகள் ஒவ்வொன்றும் மிருந்த வலிமைமிக்க மனிதர்களால் நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகளாக இருக்கின்றன. எனவே அத்தகைய வலிமைமிக்க சடங்கியல் நிகழ்வுகளுக்கான வல்லமையை வேண்டியும் அல்லது இயற்கையை தன்வசப்படுத்த கோறியும் அக்கால மனிதன் அவனுக்கான சடங்கியல் நிகழ்வுகளில் இம்மாதிரியான ஓவியங்களின் மூலம் அவனது மந்திர – மாய ஆற்றல்களை வெளிப்படுத்தியிருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக நடன காசிநாதன் குறிப்பிடுவதற்கு ஏற்றார் போலான ஓவியங்கள் கீழ்வாலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இன்னும் இத்தகைய ஓவியங்களின் வடிவத்தை ஒத்த ஓவியங்களை வட இந்திய ஓவியங்களில் பார்க்கநேர்கிறது.

5.   நடன ஓவியங்கள் :

        வேட்டைக்காலச் சிறப்பியல்புகளைக் காட்டும் வண்ணம் அமைவன நடன ஓவியங்கள். இங்கும் நடனம் என்று குறிப்பிடப்படுவது சடங்கியல் நிகழ்வாக இருக்கின்றது. மேலும் அது இனக்குழு மக்களின் வழிபாடு தொடர்பானது என்பது குறிப்பிடத்தக்கது. கீழ்வாலை, மற்றும் வேட்டைக்காரன் மலை ஆகிய இடங்களில் இவ்வகை ஓவியங்கள் காணப்படுகின்றன.

6.   வரிசையாக மனித உருவங்கள் பதிக்கப்பட்ட ஓவியங்கள் :

        குகைகளில் தீட்டப்பெற்ற வண்ண ஓவியங்களில் பல வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து மனிதர்களின் உருவங்களை காட்டுவனவாக அமைந்திருக்கின்றன. பல்வேறு நிலைகளில் மனித உருவங்கள் அதில் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒருவர் பின் ஒருவர் தொடர்ந்து வருவது போலவும், நிற்பது போலவும் உருவங்கள் அமைந்திருக்கின்றன.

7.   போரிடுதல் :

        குகை ஓவியங்களில் சண்டையிடும் காட்சிகள் இடம்பெறுகின்ற மாதிரியாக ஓவியங்கள் இடம்பெறுகின்றன. இவ்வகை ஓவியங்களில் மனிதனின் உருவமும் விலங்கினங்களின் உருவமும் இரண்டரகலந்த தன்மையில் இடம்பெறுகின்றன. பொதுவாக குதிரை, யானை போன்ற விலங்கினங்களின் ஓவியங்கள் அந்த வகையில் அதிகமாகக் காணப்படுகின்றன. சென்னராயன் பள்ளி, கொணவக்கரை, சிறுமலை, மல்லசமுத்திரம் போன்ற இடங்களில் இவ்வகை ஓவியங்கள் காணக்கிடைகின்றன.


8.   கைவடிவம் :

        வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சார்ந்த குகை ஓவியங்கள் பலவற்றில் கை வடிவம் கொண்ட ஓவியங்கள் சில காணப்படுகின்றன. வாழ்விடங்களில் வாழ்ந்தற்தான அடையாளங்களை அல்லது அவ்விடங்களில் தான் புழங்கியதற்கான (வந்ததற்கான) அடையாளங்களைப் பதிவு செய்தல் என்ற நோக்கத்தில் கை வடிவத்தை அக்கால மக்கள்குழுக்கள் அவரவர்களுக்கு ஏற்றார் போல பதிவு செய்திருக்கின்றனர். இப்பதிவு போர் நடைபெற்ற இடங்களிலும் இடம் பெறுகின்றது. குகை ஓவியங்களில் இக்கை வடிவ ஓவியங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், வரலாற்றுக்கான ஆதாரங்களாகவும் திகழ்வனவாகும். அவ்வகையில் செத்தவரையில் இக்கை வடிவ ஓவியங்கள் அதிக அளவில் இடம்பெறுகின்றன.

9.   புள்ளியிடுதல் :

        புள்ளியிட்டு வரையப்பட்ட பல்வேறு ஓவியங்கள் குகைப் பகுதிகளிலும் குகைப் பாதுகைக்கு அருகாமையிலும் நிறைய கிடைத்திருக்கின்றன. அவைகளில் சில புள்ளிகளை சுற்றி வரையப்பட்ட ஓவியங்களாகவும், சில புள்ளிகளை இணைத்து வரையப்பட்ட ஓவியங்களாகவும் காணப்படுகின்றன. அதேபோல் விலங்களை வரைந்திருக்கும் ஓவியங்களில் புள்ளிகள் அதிக அளவில் காணப்படுகின்றன.  சுற்றுவரைக்கோட்டு வகையில் காணப்படும் ஓவியங்கள் முக்கிய ஆதாரங்களுக்கானதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். செத்தவரையில் இப்புள்ளியிட்டு வரையப்பட்ட ஓவியங்களைக் காணமுடிகிறது. இவை சில கட்டுமானத்தொடர்பியலுக்கும், அக்கால மக்கள் மரக்கால்கள் நட்ட முரைகளுக்குமான ஆதாரங்களாக விளங்குகின்றன.

10.  விரல்களால் வரைந்த ஓவியங்கள் :

        பொதுவாக ஓவியக்கலையில் குகை ஓவியங்கள் எளிமையானதாக கூறப்படுகின்றன. அவை தொடக்கத்தில் கை கைவிரல்களால் வண்ணங்களை எடுத்து வரையப்பட்டவைகளாக இருக்கின்றன. இம்முறையில் சில ஓவியங்கள் மிக அதிகமான வண்ணப்பூச்சி உடையவாகக் காணப்படுகின்றன. செத்தவரையில் காணப்படும் கைவடிவ வண்ணப்பூச்சுகள் சில அதிகமான வண்ணப்பூச்சுகள் பூசப்பட்ட ஓவியங்களாக இருந்திருக்கின்றன.

11.  உடலுறவுக் சாட்சிகள் :

        குகை ஓவியங்களில் அதிக அளவில் இடம் பெறும் காட்சிகளும் விலங்கினங்கள் மற்றும் மனிதர்கள் உடலுறவு கொள்ளுதலைப் போன்ற காட்சிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகக் கருதப்படுகின்றன. இவ்வகை ஓவியங்கள் கலை மீதிருந்த அக்கால மனித எண்ணங்களுக்கான வடிகால்களாக திகழ்கின்றன. இன்னும் இவ்வகை ஓவியங்களா அக்கால கலை முறைமைகளுக்கான குறிப்புகள் கிடைப்பதான தகவல்கள் கூறப்படுகின்றன.

12.  முழுமையான விலங்கின வடிவங்கள் :

        வரலாற்றுக்கு முற்பட்டக் காலத்துக்குகை ஓவியங்களில் சில முழுமையான விலங்கினங்களின் ஓவியங்களாக இருக்கின்றன. ஆனால் அவைகள் பெரும்பாலும் பாதி நேர்வடிவமுறையில் அமைக்கப்பட்டவைகளாக இல்லாமல் – முகத்தை பின்பக்கம் கொண்டவைகளாகவும் அல்லது முகத்தின் பின் பகுதி தெரியும் வண்ணம் வரையப்படவைகளாகவும் இருக்கின்றன. இதனை ஓவியத்துறைச் சார்ந்த ஆட்கள் பலர், பக்க நேர்வடிவ முறை என்று அழைக்கின்றார்கள்.

13.  திரும்பிப்பார்த்தல் :

        தொன்மையான குகை ஓவியங்களில் சில, விலங்கினங்களின் உருவங்களை முழுமையாக வரையாமல் திரும்பிப்பார்க்கும் நிலையில் வரையப்பட்டவைகளாக இருக்கின்றன. இம்முறை ஓவியங்களில் இடம்பெறும் விலங்கினங்களில் மிகுதியாக இருப்பன மான், மாடு ஆகிய விலங்குகள் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. செத்தவரையில் காணக்கிடைக்கும் இவ்வகை திரும்பிப் பார்க்கும் ஓவியங்கள் பல அடர்த்தியான வண்ணப்பூச்சு உடையனவாக இருக்கின்றன.

14.  குறியீடுகள் :

        தொடக்ககால ஓவியங்கள் முழுக்க முழுக்க குறியீடுகளாகவே இருந்திருக்கின்றன என்பது வரலாறு. அதில் சில ஓவியங்கள் எழுத்து வடிவ குறியீடுகளைப் பெற்றுள்ளன. இவ்வகை குறியீடுகளை வரிவடிவக் குறியீடுகள் என்று அழைக்கலாம். இவ்வரிவடிவ குறியீடுகள் சில நேரங்களில் காலத்தைக் கணிக்க வழி வகைச்செய்கின்றன. கீழ்வாலை, புறக்கால், திருமலை, மல்லசமூத்திரம், குற்றாலப்படை, பொதிகை மலை, பெருமூக்கல், தால்ப்பட்டி, திருமல் பாடி, அட்டக்கூடல், குருவிநாயனப்பள்ளி, மல்லச்ந்திரம், முடிப்பிநாயணப்பள்ளி, ஒப்பந்தவாடி, ஓதிக்குப்பம் போன்ற இடங்களில் இத்தகைய குறியீட்டு ஓவியங்கள் காணப்படுகின்றன. இன்னும் கூட பொதிகை மலையிலுள்ள காணிக்காரன் என்னும் மலைவாழ் மக்கள் அங்குள்ள குறியீட்டுவடிவ ஓவியங்களை வழிபாடு செய்துவருகின்றனர். அங்கு வாழும் மக்கள் அக்குறியீடுகளை அவர்களது முன்னோர்களின் குலக்குறிகளாக வணங்கி வழிபடுகின்றனர். ஆக வழிபாட்டுக்கான தொடக்கக் காலகட்டத்தில் ஓவியங்களுக்கான பங்களிப்புகள் பெருவாரியாக இருந்திருக்கின்றன என்பதும் நாம் ஆராயப்பட வேண்டிய ஒன்றாக முக்கியத்துவம் பெறுகிறது. அவ்வாறே, குற்றாலப் புடையில் கதிரவன் வடிவம், வழிப்பாட்டுக்குறியதாக விளங்குகிறது. அங்கு ஓவியங்களில் காணப்படும் கதிரவனின் வடிவம், அங்கு வாழும் மக்களின் வீடுகளிலும், அவர்களது மட்பாண்டங்களிலும் (பெருங்கற்காலத்து மட்பாண்டங்கள்) காணப்படுகின்றன. அம்மலையின் குகைகளின் அமைக்கும் குறிக்கும் வகையிலான குறியீடுகளும் அங்கிருக்கும் ஓவியங்களில் காணக் கிடைக்கிறது. இன்னும் சில இடங்களி தரை விரிப்பில் சூரியனின் குறியீடு வரையப்பட்ட ஓவியங்கள் இருக்கின்றன. அவ்விடம் வழிபாடு செய்யப் பயன்படுத்தப்பட்ட இடமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. குற்றாலப்புடையில் குறிப்பாக இரண்டு இடங்களில் இவ்வகைக் குறியீட்டுகள் பதிக்கப்பட்ட ஓவியங்கள் காணப்படுகின்றன. அதேபோல் பெருமுக்கல் குறியீடுகள் மிக முக்கிய ஆதாரத்திற்கான ஓவியங்களைக் கொண்டவைகளாக இருக்கின்றன. ஆனால் இங்கிருக்கும் ஓவியங்களைப் பற்றிய ஆய்வுகள இன்னும் சரியாக வெளிவரவில்லை என்பதால் அவைகள் அப்படி முடங்கிக்கிடக்கின்றன.

15.  இனக்குழுக் குழுக்குறியீடுகள் :

        குகை ஓவியங்களில் காணப்படும் சில குறியீடுகள் இனக்குழு குறியீடுகளாக மைந்திருக்கின்றன. இனக்குழு மக்களின் வாழ்க்கை முறையில் மிகமுக்கிய பங்கு வகிப்பனவாகும்.

16.  சடங்குகள் :

        ஓவியங்களில் காணப்படும் குறியீடுகள் மிக அதிக அளவில் குறிப்பவை சடங்கியல் நிகழ்வுகளையே என்பது குறிப்பிடத்தக்கது. இனமக்களின் சடங்கியல் நிகழ்வுகளைச் சுட்டும் பாங்காக வேட்டை வளமை வேண்டி செய்யும் சடங்குகள் ஓவியங்களி அதிகமாகக் காணப்படுகின்றன. பொதுவாக இனக்குழு மக்களை மையமிட்ட சடங்குகளாக அதிக ஓவியங்கள் பரவலாக எல்லா இடங்களிலும் காணக்கிடைக்கின்றன. இவைகள் சில ஒத்தத் தன்மைக்கொண்டவைகளாகவும் இருக்கின்றன என்பது கவனிக்கத்தக்க வரலாற்றுப் பார்வையாகும்.

17.  மாயம் :

        ஓவியங்கள் சில அச்சம், மாயம் என்னும் இரு நிலைகளைச் சுட்டுவனவாக  இடம்பெறுகின்றன. வளமை வேண்டியும், மனிதன் கண்டு அஞ்சும் படியான விலங்கினங்களை ஒத்த ஆற்ற வேண்டியும் அவற்றின் வடிவங்களை வரைதல் என்னும் முறையில் இவ்வகை ஓவியங்கள் இடம்பெறுவனவாக இருக்கின்றன. இடில் அக்கால மனித தனக்குக் கிடைக்கும் உணவினை மந்திரமாக நினைத்திருப்பதற்கான குறிப்புகள் கிடைப்பதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

18.  கல்வெட்டுச் சித்திரங்கள் :

        குகை ஓவியங்களில் காணப்படும் மற்றொரு சிறப்பாக படைப்பு, கல்வெட்டுகளில் செதுக்கியிருக்கும் உருவங்களாகும். இவ்வகை ஓவியங்கள் முதலில் பாறைகளில் உருவங்களாகச் செதுக்கப்பட்டு, பின்னர் அதன் மீது வண்ணம் பூசப்பட்டைவைகளாக இருக்கினற்ன. இவ்வைகை ஓவியங்கள் பொதுவாக தொன்றுதொட்டு தொடர்ந்து வாழ்ந்து வரும் மக்கள் கூட்டங்களில் வாழ்விடமாகவும், வணங்குதலுக்குரிய நினைவிடமாகவும் அமைந்திருக்கின்ற இடங்களில் காணப்படுகின்றன.  குற்றாலப்புடை, பொதிகைமலை, பெருமுக்கில் ஆகிய இடங்களை அவ்வகையில் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
19.  மேல்நிலை ஓவியங்கள் :

        மேல்நிலை ஓவியங்கள் என்று அழைக்கப்படும் இவ்வகை ஓவியங்கள் குகைகளில் மேல் பகுதியில் வரையப்பட்ட ஓவியங்களாகும். பொதுவாக குகைகளில் காணப்படும் ஓவியங்களின் வரைவிடங்கள் அக்கால சுழலைக் கணிக்க உதவுவனவாக இருப்பது குறிப்படத்தக்கது. அவ்வகையில் குகைகளில் மெற்பகுதியில் வரையப்பட்ட ஓவியங்கள் அதிகம் சிதையாமல் தொன்மையுடன் காணப்படுகின்றன. அதேபோல் மேற்பகுதிகளில் வரையப்பட்ட ஓவியங்களின் கால எல்லை ஓரளவிற்கு ஒத்துப்போகும் தன்மையில் இருப்பது தொல்பொருள் ஆய்வாளர்களின் கண்டுப்பிடிப்புகளில் கூறப்பட்டுள்ள முக்கிய செய்தியாக இருக்கின்றது. அதே கீழ் பகுதியில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் பல்வேறு காலத்து ஓவியங்களாக இருக்கின்றன. குறிப்பாக கீழ்வாலை, சிறுமலை போன்ற இடங்களில் இருக்கும் ஓவியங்களில் இவ்வேறுபாடுகளைக் காணலாம்.

20.  இயற்கைக் காட்சிகள் :

        வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து ஓவியங்களிலும் அவற்றைத் தொடர்ந்து வரும் பிற்கால ஓவியங்களிலும் இயற்கை அழகியல் கொஞ்சும் காட்சிகளாக மரம், மலை, ஆறு போன்ற காட்சிகள் மிக அதிக அளவில் இடம்பெறவில்லை. ஒருசில குகை ஓவியங்கள் மட்டும் சில இயற்கை காட்சிகளை பதிவுசெய்திருக்கின்றன. குற்றாலப்புடை கல்வெட்டு வரைவுகள், அம்மலையின் அமைப்பினையும், அங்கிருக்கும் குகைகளின் அமைவிடங்களையும் அதற்கான சூழலோடு சுட்டிக்காட்டும் வகையில் சில குறியீட்டு ஓவியங்களைக் கொண்டிருக்கின்றன.

21.  மனித உருவங்கள் :

        மிகத் தொன்மையான பாறை ஓவியங்களில் மனித உருவங்கள் மிகுதியாக இடம்பெறவில்லை. பிற்கால ஓவியங்களின் தட்டையான வடிவில் செய்யப்படிருந்த ஓவியங்கள்தான் முதன் முதலாக மனித உருவங்களை ஓவியங்களாகப் பெற்றிருக்கின்றன. சில இடங்களில் தலைப்பாகையுடன் கூடிய மனித உருவங்கள் ஓவியங்களா இடம்பெறுகின்றபன. இதனைக் காமயக்கவுண்டன் பட்டி, கொணவக்கரை, சிறுமலை போன்ற இடங்களில் காணமுடிகிறது.

22.  நீண்ட தலைமுடியுடைய மனிதன் :

        கற்றைச் சடைப் போன்ற நீண்ட தலைமுடியைக் கொண்ட மனித உருவங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துக் குகை ஓவியங்களில் இடம் பெறுகின்றன. இவ்வகை ஓவியங்கள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டவாறு வரையப்பட்டிருக்கின்றன. கீழ்வாலை, சிறுமலை ஆகிய இடங்களில் இவ்வகை ஓவியங்களைக் காணலாம்.


23.  பறவை ஓவியங்கள் :

        பறவைகளுக்கு அதிக முக்கியத்துவம் என்றஅளவில் பாறை ஓவியங்களில் பறவைகள் காணபடவில்லை என்றாலும், சில குறிப்பிடத்தக்க பாரை ஓவியங்களில் பறவைகளின் படங்கள் வரையப்பட்டுள்ளன. அதில்லாமல் சில குறியீட்டு ஓவியங்கள் பறவையினை அடையாளப்படுத்தும் வகையில் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

24.  கதிரவன் :

        பாறை ஓவியங்களில் மிகவும் தொன்மையான வடிவங்களில் கதிரவனின் வடிவமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவ்வகையில் ஒளிக் கதிரவனுடன் கூடிய கதிரவனின் ஓவியங்கள் சில குகைகளில் காணப்படுகின்றன. விலங்கினங்களின் ஓவியங்கள் ஒடம்பெறும் குகைப் பகுதிகளில்தான் கதிரவனின் ஓவியங்களும் இடம்பெறுகின்றன. ஆனால் விலங்கினங்களின் ஓவியங்களைப் போன்று அளவிற்கு அதிகமாக இக்கதிரவன் ஓவியங்கள் இடம்பெறுவதில்லை. கீழ்வாலையிலும், குற்றாலப் புனக் கல்வெட்டு வரைவுகளிலும் ஞாயிறு வடிவவான கதைரவனின் ஓவியங்கள் காணப்படுகின்றன.

25.  விண்மீன்கள் :

        வின்மீன் (நட்சத்திர) வடிவம் கொண்ட ஓவியங்கள் சில குகைகளில் காணப்படுகின்றன. இவ்வகை ஓவியங்கள் காலக்கணிப்புகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருந்திருக்கின்றன.

26.  வீட்டின் அமைப்பு :

        வீட்டின் தரைவடிவ அமைப்புப் போன்று காணப்படும் ஓவியம் மிகத் தொன்மையான வடிவமைப்பைக் கொண்டதாகும். அவ்வகையில் செத்தாவரையில் காணப்படும் ஓவியங்கள் சிந்துசமவெளி முத்திரைகளில் காணப்படும் ஓவியத்தைப்போன்று காட்சிதருகிறது. குற்றாலப்புடைக் கீறல் வடிவங்களிலும், ஓரமணக்குண்டா ஓவியங்களிலும் வீடு, இடம் ஆகியவற்றைக் குறிப்பிடும் ஓவியங்கள் இடம்பெறுகின்றன. கொள்ளூரில் உள்ள ஓவியங்கள் மதில்சுவர் பற்றிய சிந்தனையைக் கொண்டதாகக் காணப்படுகிறது.

27.  படகு :

        பல குகை ஓவியங்களில் படகுவடிவம் இடம்பெறுகிறது. இது கட்டுமரம் போன்ற வடிவமைப்பைப்பெற்றதாகும். அவற்றுள் துடுப்புடன் பயணம் செய்யுமாறு அமைக்கப்பட்டிருக்கும் கீழ்வாலை ஓவியம் மிகவும் சிறப்புடையதாக கூறப்படுகின்றது. இன்னும் இப்படகு வடிவம் கொண்ட ஓவியங்கள் காமயகவுண்டன் பட்டியில் காணக்கிடைக்கிறது.

28.  நீர்வாழ்வன :

        நீரில் வாழ்கின்ற சில பிராணிகளின் வடிவங்கள் சில குகை ஓவியங்களில் காணப்படுகின்றன. குறிப்பாக மீன் வடிவத்தையும், முதலையின் வடிவத்தினையும் கூறலாம். சிறுமலை ஓவியங்களில் இவ்விரண்டு வடிவங்களையும் காணலாம்..

29.  நாய்  :

        பாறை ஓவியங்களி விலங்கினங்களை வேட்டையாடும் நிலையில் நாய் ஓவியங்கள் இடம்பெறுகின்றன. இன்னும் சில இடங்களில் போருக்குச் செல்பவனைப் போன்ற வீனிவின் கையில் வைத்திருக்கும் கயிற்றில் கட்டப்பட்டவாறு நாயின் வடிவம் வரையப்பட்டிருக்கின்றது.

30.  மயில் :

        மயிலின் வடிவம் பாறை ஓவியங்களில் காணப்படுகிறது. சீகூர், சிறுமலை, மல்ல சமுத்திரம் ஆகிய இடங்களில் இவற்றைக் காணலாம்.

31.  வால் பகுதி :

        பாறை ஓவியங்களில் வரையப்பட்டிருக்கும் விலங்கினங்களின் வால் பகுதியானது தெளிவாக கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இவை சில இடங்களில் இரண்டுவகையான வண்ணங்கள் கொண்டு வரையவப்பட்டனவகாவும் இருக்கின்றன. சிறுமலை ஓவியங்களில் இந்த வேறுபாட்டினை தெளிவாக காணலாம்.

32.  பிறவிலங்கினங்கள் :

        பாறை ஓவியங்களில் அதிகம் இடம்பெறுபவை விலங்கின ஓவியங்களே. சில பாறை ஓவியங்களில் அப்பகுதியில் காணப்படும் விலங்கினங்களின் உருவங்கள் இடம்பெறுகின்றன. அத்தகைய ஓவியங்களைக் கொண்டு அப்பகுதியில் காணப்பட்ட விலங்கினங்களையும், அதன் தேவைகளையும், அப்பகுதியின் தட்பவெட்ப சூழலினையும் புரிந்துகொள்ளமுடிகிறது. சிறுமலை ஓவியங்களில் பன்றி அதிகமாக இடம் பெறுகிறது. அதேப்போல் மலைச்சார்ந்த பகுதிகளில் முள்ளம்பன்றி என்னும் விலங்கினம் அதிகமாக இருந்ததற்கான சன்றாதாரங்களும் நிறைய அவ்வோவியங்களில் கிடைக்கின்றன.

33.  .எக்ஸ்ரே வடிவம் :

        எக்ஸ்ரே வடிவ அமைப்பைக் கொண்ட பாறை ஓவியம் ஒன்று ஆலம்பாடியில் காணப்படுகின்றது. எக்ஸ்ரே ஓவியம் என்பது உடலின் உள் உறுப்புகளைக் காட்டும் வண்ணம் வரையப்படும் ஓவியமுரையினைச் சார்ந்ததாகும். இதனை உயிர்வழி என்று அழைக்கின்றனர். ஸ்காண்டினேவியா, ஐரோப்பியா, சைபீரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நிறைய இத்தகைய ஓவியங்கள் காணக்கிடைக்கின்றன. வட இந்தியாவில் பல இடங்களில் இவ்வகை ஓவியங்கள் பரவலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறியீட்டு முறை, சித்திர எழுத்து வடிவ முறையில் ஆலம்பாடி என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியத்தில் எக்ஸ்ரெ வடிவமைப்பினைக் காணமுடிகிறது. இந்தவகை ஓவியங்களை சுற்றுவரைக் கோட்டு ஓவியங்கள் என்றும் கூறுவர். இருந்தாலும் இதனை எக்ஸ்ரே வடிவமைப்புக் கொண்ட ஓவியங்கள் என்று கூறுவதே சரியானதாகக் கருதப்படுகிறது.

34.  சிந்துவெளி குறியீடுகள் :

        தமிழகப் பாறை ஓவியங்களில் இடம்பெறும் வரைவுகளில் சிந்துவெளிக் கூறியீடுகள் போன்று ஒருசில இடங்களில் காணப்படுகின்றன.04 இடம், காலம் ஆகிய இரண்டு கோணங்களிலும் இக்குறியீடுகள் குறித்த ஆய்வுகள் வேறுபட்டுள்ளதால் தெளிவான முடிவுக்கு இதன் மீதான ஆய்வுகள் துணைசெய்யவில்லை. இருப்பினும் தொல்லியல், கல்வெட்டியல், அறிஞர் ஐராவதம் மகாதேவன் போன்றோர் கீழ்வாலை எழுத்துவரைவுகள் முகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகள் என்று கருதுகின்றார்கள். வெரும் குறியீடுகளாக பல்வேறு இடங்களில் வரையப்பட்டுள்ள எழுத்து வடிவங்களை ஒன்றிணைத்துக் காண்பது ஓவியங்களின் காலக்கணிப்புகளுக்கு உதவக்கூடும் அல்லது மொழியியல் வளர்ச்சியின் பரவலை அறிய வாய்ப்பாகவும் அமையும். எனவே குற்றாலப்புடை, பொதிகைமலை, திருமலை வேட்டவலம் ஆகிய இடங்களில் காணப்படும் எழுத்து வடிவக் குறியீடுகளை மேலும் ஆய்வு செய்வது பயனுள்ளதாக அமையும்.

35.  குன்றிடை வாழ்விடங்கள் :

        மலைப்பகுதிகளில் இயற்கையான குன்றுகளிலே அமைந்துள்ள வாழ்விடங்கள் பாறைகளின் கீழ் பகுதியான இடமாகவோ அல்லது குகை போன்ற இயற்கைத்தோற்றத்தை தரக்கூடிய இடமாகவோ அமைந்திருக்கின்றன. இவ்வாறு அமைகின்ற இடங்களை குன்றிடை வாழ்விடங்கள் என்று அழைக்கலாம். தமிழகப் பாறை ஓவியங்கள் காணப்படும் இடங்களில் இவ்வகைக் குன்றிடை வாழ்விடங்கள் அடங்குகின்றன. குன்றிடை வாழ்விடங்கள் கற்காலத்திற்குரிய பண்பாட்டுச் சின்னங்களாகவும், பெருங்கற்கால மக்களின் வாழ்விடப்பகுதிகளுக்கு மிக நெருங்கிய தொடர்புடைய ஒரு இடமாகவும் இருந்திருப்பதை உணரமுடிகிறது. பெருங்கற்காலத்து வாழ்விடங்களுக்கும், இக்குன்றிடை வாழ்விடங்களுக்கும் உள்ள தொடர்புகள் தொல்லியல் சான்றுகளால் உறுதிசெய்யப்படுகின்றன.

        மக்களின் மலைவாழ் இடங்களிலிருந்து குன்றிடை வாழ்விடங்கள் பலயிடங்களில் பொதுவாவிழ்டங்களுக்கும் இதற்கும் சற்று தொலைவில் அமைந்துள்ளனவாக இருக்கின்றன. குன்றிடை வாழ்விடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் அக்கால மக்களின் பொருட்சார்ந்த எச்சங்கள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயத்தில் அக்கால மக்களின் பொருட்சார்ந்த பண்பாட்டுப் படைப்புகளும் அவர்களிடம் மிகுதியாகக் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அக்கால மக்கள் குன்றிடை வாழ்விடங்களில் தொடர்ந்து தங்கி – வசித்து வரவில்லை என்பது புலனாகிறது. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நாட்களில் அல்லது அக்காலத்தில் மட்டும் வந்து செல்லும் இடமாக இக்குன்றிடை வாழ்விடங்கள் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் இவ்வாழ்விடங்கள் சடங்குகள் நிகழ்த்தும் இடமாகவும், முன்னோர் வழிப்பாட்டிற்குரிய நினைவிடமாகவும் இருந்திருக்கக் கூடும் என்பதற்கான சான்றுகள் நமக்கு முன்னமே நிறம்ப கிடைத்திருக்கின்றன.

        அதேபோலி குகைப்பகுதிகளில் மேல் விதானமாக இயற்கையில் உள்ள பறைகளின் மீது ஏராளமான ஓவியங்கள் இடம்பெறுகின்றன. இவ்வகை வரைவுகள் மயிலாடும் பாறை, மல்லபாடி, ஓரமணக் குண்டா, ஒப்பத்தவாடி, தாலபள்ளி, முடிப்பிநயனப்பள்ளி போன்ற சுற்றுப்புறங்களில் உள்ள குன்றுகளில் காணக்கிடைக்கின்றன. இருப்பினும் விதானப் பாறையின் மீது வரையப்பெற்ற ஓவியங்களில் பல சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன. இக்குறிப்பு இவ்வோவியங்கள் காலத்தால் முந்தியவை என்பதற்கான ஆதாரங்களாக விளங்குவதாக ஆய்வாளர் ராசு பவுன்துரை குறிப்பிடுகிறார்.05

               அதுபோல, பெருங்கற்காலப் பதுக்கைகள் உள்ள இடங்களின் அருகேயும், குறிப்பாக அங்கிருக்கும் மலைப்பகுதிகளி குன்றிடை வாழ்விடங்கள் மிகுதியாக இந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

36.  கல்திட்டைகள் :

        பெருங்கற்காலக் கல்திட்டைகள், கற்பதுக்கைகளின் பாறை துண்டுகளின் மீதும் சில ஓவியங்கள் வரையப்பெற்றுள்ளன. இவ்வோவியங்கள் பண்பாட்டு அடிப்படையிலும், காலக்கணிப்பின் முறைமையிலும் அதிக சிறப்பு வாய்ந்தவைகளாக கருதப்படுகின்றன. கல்திட்டை, கற்பதுக்கை என இவ்விரண்டும் பெயர்கள் வேறுபட்டாலும் இவைகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஒரே மாதியானவைகளாக இருக்கின்றன. அவ்வோயிங்களின் தன்மைகளை கீழ்கண்டவாறு பார்க்கலாம்.

1)   குன்றிடை வாழ்விடங்களுக்கும் தற்பதுக்கை அல்லது கல்திட்டைகள்ன் மீது இடம் பெறும் வரைவுகளுக்கும் இடையே இடம்பெறும் ஓவியங்களின் வடிவங்கள் சில வேறுபட்டுள்ளன.
2)   கற்பதுக்கை அல்லது திட்டைகளின் மீதுள்ள ஓவியங்களில் மனித உருவங்கள் மிகுதியாக உள்ளன.
3)   கல்திட்டை, பதுக்கையின் மீது வரையப்பட்டுள்ள ஓவியங்களில் இரண்டு விதமான ஓவியங்களைக் காணமுடிகிறது. அவை ஒன்று ஒற்றைக்கோட்டோவியங்கள், இரண்டு வண்ணக்கலவை தீட்டப்பெற்ற இரட்டை வண்ணக் கோட்டோவியங்கள். இவைகளை கோட்டுருவில் அமைந்துள்ள வண்ண ஓவியங்கள் என்றும் அழைக்கின்றனர்.
4)   இவ்வோவியங்களில் குறியீடுகள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன.
5)   இவ்வோவியங்கள் காலந்தோறும் தொடர்ச்சியாக வரையப்படும் ஓவியங்களில்லை என்பதால் சிதைவற்றவைகளாக இருக்கின்றன.
6)   இவ்வோயிங்கள் அனைத்தும் பெரும்பாலும் காலக்கணிப்புக்குத் துணைச்செய்வனவாக இருக்கின்றன.
7)   இவ்வோயிங்களின் அமைவிடம் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தில் அல்லது மரபின் அடிப்படையில் வரையப்பட்டவைகளாக இருக்கின்றன.
8)   இவ்வோவியங்கள்ன் மேற்புறத்தில் கற்களின் வரை ஓவியங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
9)   ஈமக்கற்துளையின் அமைப்பில் மேற்குப்பகுதி அதிக வரைவுகளைப் பெற்றுள்ளப்பகுதியாக இருக்கின்றது.
10)  வரைவுகளின் தொடர் உத்தியாக மேற்கிலிருந்து வடக்காகவும், தெற்காகவும் தொடர்ச்சியாக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
11)  ஈமக் கற்துளைகளின் அருகே ஓவியங்களை வரைவது என்ற ஒன்றிலிருந்தே கற்திட்டை, பதுக்கை போன்றவற்றில் ஓவியங்கள் வரைவதற்கான தொடக்கமாக இருந்திருப்பதற்கான ஆதரங்கள் சில அதில் கிடைக்கின்றன.
12)  இவ்வோவியங்கள் காணப்படும் வண்ண வேறுபாடுகள் சில இற்கையான அமைவிடத்தன்மைக்கு ஏற்பவும், சில அக்காலத்திற்கேற்பவும் மாறுபடுபவைகளாக இருக்கின்றன.
13)  கல்திட்டை, கற்பதுக்கை ஓவிய வரைவுகள் கிழக்காசிய நாடுகளில் குறிப்பாக ஜாவா, சுமத்ரா பகுதிகளில் காணப்படும் கீறல் வரைவுகளின் தன்மைகளோடு ஒத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிறைவாக 

        இக்கல்திட்டை மற்றும் பதுக்கை வரைவுகள் பெருங்கற்கால மக்களின் பண்பாட்டிற்கு உரியவைகளாக இருப்பதால் இவைகள் மிகப்பழமையானவைகள் அல்ல என்பது உறுதியாகிறது.

மற்றொன்று, இங்குள்ள ஓவியங்களில் மனித வடிவங்கள் மிகுதியாக இருப்பதால் தனிமனித உணர்வும், மரபும் இவ்வோயிங்களால் சுட்டப்படுவதற்காக கருத வாய்ப்பிருக்கிறது. மேலும் இதில் இடம்பெறும் வடிவ ஒற்றுமைகளின் வாயிலாக ஒரு பொதுப் பண்பாட்டுச் சூழல் வெளிப்பட்டாலும், இதிலேயே தனித்தொகுப்புகளாக வெளிப்படும் பல்வேறு வரைவுகளின் உண்மைக் காரணங்கள் முழுமையாக வெளிப்படுத்த இயலாத தன்மையில் இருப்பது குறிப்ப்பிடத்தக்கதாகிறது.

        இதுவரை தமிழகத்தில் காணப்படும் பெருங்கற்காலச் சின்னங்களை கிழக்காசிய நாட்டுப் பண்பாட்டுடன் ஒப்பிட்டு காண இயலவில்லை. எதிர்வரும் காலங்களில் இவ்விரண்டுப் பகுதிகளிலும் உள்ள சான்றுகளை ஒன்று சேர்த்து, அவற்றிலிருக்கும் ஒப்புமைக் கூறுகளை ஆய்வு செய்தால், ஜாவாப் பகுதியின் பண்பாடும், கம்போடியப் பகுதியின் பண்பாடும் ஒரு வகையில் தொடர்புடையவையாகவே தோன்றுவதற்கான ஆதாரங்கள் இதுவரை நாம் கண்ட பாறை ஓவியங்களின் குறிப்புகளின் காணக்கிடைக்கின்றன். எனவே இதன் பரவலால் வடசீனம், கொரியா, ஜப்பான் போன்ற நீண்ட எல்லையைத் தமிழகத்தின் பண்பாட்டுக் கூறுகள் தொட்டுள்ளன எனலாம்.

  
       
அடிக் குறிப்புகள்
1.        Glya Daniel., One hundred years of old world prehistory., one Hundred Years of Anthropiolgy., J.O.Brew (Ed)., Londan., 1972., P.61.
2.        H.D.SanKalia., Prehistory and Protohistory of India and Pakistam, Poona., 1974., P.07.
3.        நடன காசிநாதன்., தமிழகத்தின் வரலாற்றுக்கு முந்தய காலத்து ஓவியங்கள்., யுனெஸ்கோ கூரியர்., சென்னை., 1974.
4.        பால் சாமி., தமிழ்நாட்டில் சிந்துவெளி எழுத்தோவியம்., சென்னை., 1984.
5.        ராசு பவுந்துரை., தமிழகப் பாறை ஓவியங்கள்., சென்னை, 1986.பார்வை நூல்கள்
1.   நடன காசிநாதன்., தமிழகத்தின் வரலாற்றுக்கு முந்தய காலத்து ஓவியங்கள்., யுனெஸ்கோ கூரியர்., சென்னை., 1974.
2.   ச.குருமூர்த்தி., தொல்பொருளாய்வும் தமிழர் பண்பாடும்., சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு, சென்னை, 1974.
3.   பால் சாமி., தமிழ்நாட்டில் சிந்துவெளி எழுத்தோவியம்., சென்னை., 1984.
4.   க.சிவராமமூர்த்தி., இந்திய ஓவியம், புதுதில்லி., 1970.
5.   இராசு.பவுன்ராசு., கீழ்வாலைம் செந்தவரை ஓவியங்கள் – ஓர் ஆய்வு., தமிழ்ப்பொழில், கரந்தை, 1982.
6.   இராசு.பவுன்துரை., மீன் வழிபாடு., தமிழ்ப்பொழில்., கரந்தை., 1983.
7.   இராசு.பவுன்துரை., வரலாற்றுக்கு முந்திய காலத்து மீன் ஓவியங்கள்., வளரும் மீனவம், சென்னை., 1983.
8.   இராசு.பவுன்துரை., தமிழகப்பாறை ஓவியங்கள்., சென்னை, 1986.
9.   Glya Daniel., One hundred years of old world prehistory., one Hundred Years of Anthropiolgy., J.O.Brew (Ed)., Londan., 1972., P.61.
10.  H.D.SanKalia., Prehistory and Protohistory of India and Pakistam, Poona., 1974., P.07.


___________________________________________________

2 comments:

  1. அய்யா தங்கள் ஆய்வும் கட்டுரையும் நன்று. புதுக்கோட்டை-திருமயம் கோட்டையில் உள்ள பாறையில் நாங்கள் கண்டுபிடித்த பாறை-ஓவியங்கள் குறித்த செய்திகளைப் பார்த்துத் தங்கள் கருத்தை அறிய விழைகிறோம். - பார்கக- ஆய்வு செய்து இந்தப் பாறை ஓவியங்கள் பற்றிய செய்திகளை வெளியுலகிற்குக் கொண்டுவந் த எங்கள் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் வலைப்பக்க முகவரி - http://nadainamathu.blogspot.in/ . மற்றும் எனது வலைப்பக்கப் பதிவிலும் இதனை இட்டிருக்கிறேன். பார்க்க -http://valarumkavithai.blogspot.in/ தங்கள் கருத்தறிய ஆவல் அய்யா.

    ReplyDelete
  2. தமிழகப் பாறை ஓவியங்கள் பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்க தகவல் திரட்டும்போது இந்த கட்டுரை கிடைத்திருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ம்கிழ்ச்சி. நன்றி..

    ReplyDelete